பாராளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டு ஜனநாயகம் உறுதிசெய்யப்பட வேண்டும்.
தேசிய சூரா சபையின் அறிக்கை
கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஜனநாயக மேம்பாட்டை கருத்திற் கொண்டு செயற்பட்டுவரும் தேசிய ஷுரா சபையானது தற்போது நாட்டில் உருவகியுள்ள அசாதாரண அரசியல் நிலைபற்றி கரிசனை கொண்டிருக்கின்றது. இந்நிலை தொடருமாயின் வேண்டத்தகாத பல சூழ்நிலைகள் மென்மேலும் உருவாகலாம்.கடந்த 29ஆம் திகதி கூடிய தேசிய சூரா சபையின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல், 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட, நாட்டில் பொதுவாக மாற்றம் வேண்டப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் கட்சி பேதங்களை மறந்து தேசத்தின் நலன்கருதி தமது வாக்குப் பலத்தைப் பிரயோகித்துள்ளனர் என்பதை தேசிய ஷுரா நினைவுகூருகிறது.
எனவே தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தனிப்பட்ட அபிலாசைகளுக்கு அப்பால் தமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதித்துவத்தை ஒர் அமானிதமாகக் கருதி, தனிநபர் கட்சித் தாவல்களைத் தவிர்த்து தேசத்தின் ஜனநாயகப் பண்புகளை உறுதிசெய்வதில் தமது கட்சி வரம்புகளுக்குள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என ஷுரா சபை வேண்டிக்கொள்கிறது.
2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணையுடன் தெரிவுசெய்யப்பட்ட பிரதமரை நாட்டின் அரசியலமைப்புக்கும் பொதுவான ஒழுங்கு விதிமுறைகளுக்கும் புறம்பான வகையில் திடீரென பதிவியில் இருந்து நீக்கியதையும் மக்கள் இறைமைக்குப் புறம்பான வகையில் பாராளுமன்ற அமர்வை ஒத்திவைத்ததையும் ஜனநாயக விழுமியங்களை மீறும் செயற்பாடுகளாகவே தேசிய ஷுரா சபை கருதுகிறது.
72 வருட பாராளுமன்ற முறைமையுடனான அதி உயர் ஜனநாயக கலாசாரத்தைக் கொண்ட நாம், சர்வதேச அழுத்தங்களுக்கு உட்படாத வகையில், எமது உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவே உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்றும், இந்த நெருக்கடிமிக்க சூழ்நிலையில் பொது மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களை தேசிய ஷுரா சபை வேண்டுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கவனத்திற்கொண்டு அனைவரது பாதுகாப்பு விடயத்தில் விஷேட கவனம் செலுத்துவதுடன், நாட்டில் அமைதியும் நல்லாட்சியும் வேண்டி விஷேட துஆ பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் அனைவரையும் தேசிய ஷுரா சபை கேட்டுக்கொள்கிறது.
நமது தாயகமாம் இலங்கையை அல்லாஹ் சகலவிதமான தீங்குகளிலிருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன்.
ஜே. தாரிக் மஹ்மூத்
தலைவர்
தேசிய சூரா சபை
2018.10.31, புதன்கிழமை - கொழும்பு

No comments:
Post a Comment