இப்படிக்கு தந்தை
இரு பிள்ளைகளையுடைய 23 வயதுடைய இளம் தாயொருவர் தனக்குத் தெரிந்த ஒரு வயது முதிர்ந்த சகோதரியோடு இன்று எமது கல்லூரிற்கு தனது ஆவணங்களை எடுத்துக் கொண்டு தொழில் தேடி வந்தார். திடீரென நேர்முகத் தேர்வுகளைப் பொதுவாக நாம் வைப்பதில்லை. இருப்பினும் அவரது நிலமைகளை கருத்திற் கொண்டு என்னிடம் பேச அனுமதிக்கப்பட்டார். இன்ட வியூவில் அவருக்குரிய தகைமை இருக்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அத்தோடு அந்த இளம் தாய் களைத்துப் போயிருந்ததை அவதானித்தேன். வாழ்வில் போராட்டங்களில் சிக்கி தவிக்கும் ஒருவராக இருக்க வேண்டுமென எண்ணி, நேர காலம் பாக்காது கவுன்ஸிலர் பாத்திரம் ஏற்று, அவரோடு உரையாடத் தொடங்கினேன். நான் ஊகித்த பிரச்சினை அவரிடம். இருந்தது.
உயர் தரத்தில் ஒரு வருடம் படித்துக் கொண்டிருந்த போதே அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடித்த நாளிலிருந்து பிரச்சினைக்கு முகம் கொடுத்து வந்துள்ளார். இரு சகோதரியோடுள்ள ஒரு மணமகனையே இவருக்கு மணம் முடித்தது வைக்கப்பட்டிருந்தது. மாப்பிளையின் தாய் கஷ்டப்பட்டு வளர்த்த ஒரே மகன் தங்களை மறந்து மனைவியின் பக்கம் சாய்ந்திடுவார் என்ற பயத்தில் அவரது மனைவியை நெருங்க விடாமல், பேச விடாமல் தடுத்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, மனச் சோர்வுக்கு ஒரு மாதம் மருந்து குடித்து ஓரளவு தேறியுள்ளார். விவாகரத்துக்குப் போய் காதி நீதிமன்றத்தில் சமாதானம் ஆகி, மீண்டும் சேர்ந்துள்ளார்.
மீண்டும் நண்பர்களோடு சேர்ந்து கூத்தடிப்பதோடு, சம்பளத்தை வீண்விரயம் செய்து, குடும்பத்தை பார்க்காது விட்டதோடு மட்டுமல்ல தொடர்பே இல்லாமலும் அவரது கணவன் தற்போது போய்விட்டார். எனவே, இந்த இளம் தாய் கையறு நிலைக்கு ஆளாகி விட்டார். முதல் பிள்ளை தந்தையின் ஏக்கத்தில் உழல்வதாலும் இவர் பெற்றோரில் தங்கி வாழ நேரிட்டதாலும் தொழில் செய்யும் நிலைக்கு தனது ஆறு மாத இரண்டாவது குழந்தையோடு தள்ளப்பட்டதாலும் வாழ்க்கையில் விரக்தி நிலைக்கு பலவந்தமாக உட்படுத்தப்பட் டதாலும் மேலும் மனச்சோர்வு நிலை அவரிடம் அதிகரிக்க ஏதுவானது. எதிர்காலம் பற்றிய கேள்விக் குறிகளோடு அங்குமிங்கும் அவர் அலைந்து தொழில் தேடுகிறார். கற்கின்ற வயதில் திருமணம் முடித்து கொடுத்ததால் தகைமைகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் கவலைப்பட்டார்.
இவ்வாறான நிலைக்கு தறுதலையான கணவனே மூல காரணம். இதற்கு நியாயம் பெற்றுக் கொடுக்க ஊர்களில் எந்த சபைகளும் இல்லை. பள்ளிகளும் இல்லை. இலகுவாக விவாகரத்து இலாபமாக கிடைக்கச் செய்யப்படுவதே தீர்வாக பொதுவாக அமைந்து விடுகின்றது. ஆண்களாலே பொதுவாக அநீதம் இழைக்கப்படும் இந்த அவல நிலை சமூகத்தில் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த அறப் போரில் ஈடுபட பாரிய வேலைத் திட்டம் ஒன்று ஊர் தழுவிய மட்டத்தில் நியாயமான முறையில் ஏற்படுத்தப்படாத வரை குறிப்பாக பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
தகவள்

எம். ரிஸான் ஸெய்ன்.
No comments:
Post a Comment